வெள்ளி, 30 நவம்பர், 2012

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு ...

வீட்டில் பெரியவர்கள் இப்படி சொல்ல கேட்டிருப்போம். தமிழன் என்ன இவ்வளவு கருமியா? அல்லது தானம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்களா?

நமக்கு தெரிந்த வரையில் எந்த பொருளையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. இப்படித்தான் பலரும் இதை புரிந்து வைத்துள்ளோம். 

ஆனால், இந்த பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் பாடுபட்டு சம்பாதித்த செல்வத்தை  யாராவது ஆற்றில் கொண்டு போய் போட சொல்வார்களா? இந்த கேள்விகளுக்கு விடை தான் இந்த பழமொழியின் உண்மையான பொருள்.

" ஆற்றில் போட்டாலும் அளந்து போடு..."

இதில், "ஆற்றில்" என்பது நாம் அனைவரும் நினைப்பது போல் "நதி" அல்ல. உண்மையாக இந்த பழமொழி எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

"அகத்தில் போட்டாலும் அளந்து போடு..."

இது, காலப்போக்கில் "ஆத்தில் போட்டாலும் அளந்து போடு" என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்று எழுதினார்கள்.

சரி, பெயர் காரணம் தெரிந்து விட்டது. இந்த பழமொழிக்கும் உடல் நலத்துக்கும் என்ன சம்மந்தம்??

"அகம்" என்பது நம் உடலை தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவை கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

இன்று நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் நாம் உட்கொள்ளும் உணவு தான். உப்பு, சர்க்கரை, புளி  என்று நம் சமையல் அறையில் இருக்கும் அனைத்து சமாச்சாரங்களும் நம் உடலில் நோயாக தங்கி இருக்கிறது.
நமது உணவு முறையை ஒழுங்கு படுத்தினாலே பல நோய்கள் நம் பக்கமே வராது. 

இப்படிப்பட்ட ஒரு சிறந்த பழமொழியை நாம் முற்றிலும் தவறான வகையில் பயன் படுத்துகிறோம் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்வோம்.

"அகத்தில் போட்டாலும் அளந்து போடு...!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக